Coimbatore Flower show: கோவையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாக அறியப்படும் கோவை, தொழில், கல்வி, விவசாயம் மற்றும் மருத்துவத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. தற்போது ஐடி துறையிலும் கோவை கால்பதித்து வருகிறது.
பொழுதுபோக்கு
30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் கோவை மாநகராட்சியில் பொழுது போக்குஅம்சங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை.
கோவையின் அடையாளமாக, மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்த வஉசி பூங்காவையும் கோட்டை விட்டுள்ளது கோவை மாநகராட்சி.
இதனிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகள் புனரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டன. இந்த சிறிய பூங்காக்கள் அந்தந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுத்தாலும், குடும்பத்துடன் கோவை மக்கள் அனைவரும் சென்று கொண்டாடும் வகையில் மாநகரில் சொல்லிக்கொள்ளும் படி ஒரு பொழுதுபோக்கு அம்சம் இல்லை.
வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணித்து கோவை குற்றாலம், வால்பாறை, பொள்ளாச்சி ஆழியாறு போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.
தொழில்துறை வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், மருத்துவ வசதியில் முன்னேற்றம் பெற்றுள்ள கோவை மக்கள் குளிர்காலத்தில் புறப்படுவது ஊட்டிக்குத் தான். அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியை கோவை மக்கள் பலரும் தவற விடுவதில்லை.
கோவை செம்மொழி பூங்கா
இந்தநிலையில், கோவையிலேயே மலர் கண்காட்சி நடத்தலாமா என்று மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதனிடையே இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 25 ம் தேதி திறந்து வைத்தார்.
இந்த பூங்காவில் மேம்பாட்டுப் பணிகள் மீதமிருந்ததால், பூங்கா மூடப்பட்டு, மீண்டும் டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. இதனிடையே மலர் கண்காட்சியை இங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Coimbatore Flower show
ஊட்டியில் நடத்தப்படும் மலர் கண்காட்சியைப் போன்றே ஆண்டுதோறும் கோவை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “கோவை செம்மொழி பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்த மாநகராட்சி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மலர் கண்காட்சி கோடை சீசனில் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக மாநகராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

