கோவை: நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவி அனுப்பிரியா கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாராமெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் அனுப்பிரியா.
இவர் நேற்று மாலை கல்லூரியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் கல்லூரிக்குச் சென்ற பீளமேடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மாணவி அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பீளமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவி மீது திருட்டு பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும், உரிய விசாரணை நடத்தக் கூறி, அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை கலைத்தனர்.
கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.