கோவை: பட்டப்பகளில் வீட்டு புகுந்து பணம், நகை கொள்ளை அடித்த நபரை, விரல் ரேகையை வைத்து 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர் கோவை போலீசார்.
போத்தனூர் நாச்சிமுத்து கவுண்டர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (30). இவர் கடந்த 10ம் தேதி குடும்பத்துடன் தனது சகோதரியின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்செங்கோடு சென்றார்.
வீட்டில் அரவது தாத்தா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் மதியம் 2 மணி அளவில் செல்வராஜின் தாத்தா வீட்டின் பின்புறம் சென்றார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 11 கிராம் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் செல்வராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே வீடு திரும்பி சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
விரல் ரேகை
தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் கைப்பற்றிய விரல் ரேகையை ஆய்வு செய்த போது பழைய குற்றவாளியான செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பாரதி நகரை சேர்ந்த சேது ராமதுரை (31) என்பவரது விரல் ரேகையோடு ஒத்துப் போனது.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் சேது ராமதுரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பணம், நகையை கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து போலீசார் சேது ராமதுரையை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைரேகை உதவியுடன் 6 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்த சுந்தராபுரம் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.




