கோவை: இந்தியா–ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை என்றும், ஜவுளித்துறையும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி முன்னேறும் என்று இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் ஹைடெக் பொருட்கள் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி சீரான வளர்ச்சியை கண்டாலும், அதிக வேலைவாய்ப்பு வழங்கும் ஆயத்த ஆடை போன்ற துறைகளில் ஏற்றுமதி பெரிய வளர்ச்சியை காணவில்லை.
இந்நிலையில், முடிவடைந்த இந்தியா–ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை*. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி போன்ற வேலைவாய்ப்பு அதிகம் வழங்கும் துறைகளின் ஏற்றுமதியை வேகமாக உயர்த்தும் வாய்ப்பை உருவாக்குகிறது.
ஐரோப்பிய யூனியன் ஆண்டுக்கு சுமார் 95 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதில் சீனா மற்றும் வங்கதேசம் சேர்ந்து 50%க்கும் மேற்பட்ட சந்தைப் பங்கைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் பங்கு சுமார் 5% மட்டுமே.
இது ஒரு வாய்ப்பு

இந்த ஆண்டில், இந்தியா, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் 6–8% வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், வியட்நாம் மற்றும் கம்போடியா 11–15% வளர்ச்சியை பெற்றுள்ளன. இது இந்தியாவிற்கான பெரும் வளர்ச்சி வாய்ப்பை தெளிவாக காட்டுகிறது.
தற்போது, இந்தியாவின் ஐரோப்பிய யூனியன் நோக்கி உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.5 பில்லியன் டாலர் அளவில் உள்ளது. இதில் நிட்வேர் ஆடைகள் சுமார் 55%, ஓவன் ஆடைகள் சுமார் 45% பங்கைக் கொண்டுள்ளன. இரு வகை ஆடைகளும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை பெறும் என நம்புகிறோம்.
இந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு சுமார் 15% CAGR வளர்ச்சியை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் எட்டினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை 11 பில்லியன் டாலராக ஐரோப்பிய சந்தையில் இரட்டிப்பாக்க முடியும்.
நன்றி
இந்த முக்கியமான மற்றும் காலத்திற்கேற்ற ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அரசாங்கத்திற்கு எங்களின் மனப்பூர்வமான நன்றிகள். ஜவுளித்துறையும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகள், புதிய தயாரிப்புகள், வெளிநாடுகளில் மார்க்கெட்டிங் அலுவலகங்கள் மற்றும் டிசைன் ஸ்டூடியோக்கள் அமைத்து தீவிரமாக செயல்படும்.
இந்த ஒப்பந்தம், இந்திய ஜவுளி ஏற்றுமதித்துறைக்கு ஒரு புதிய உயிர் ஊட்டும் முயற்சி.
இவ்வாறு பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.


How to export to use this opportunity