டெல்லி: 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன
2025 மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டதால், குடும்பங்களின் சேமிப்பு மற்றும் செலவிடும் திறன் அதிகரித்து, நுகர்வும் அதிகரித்துள்ளது. அதேபோல், 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் ரத்து செய்யப்பட்டு 2025 ஆண்டில் புதிய வருமான வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்தும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் விலையை குறைந்துள்ளதால், பொதுமக்கள், MSME நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வருகின்ற 2026 நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிப்பை விட அதிகரிக்கும் என எஸ்பிஐ ஆய்வு தெரிவித்துள்ளது.
சீர்திருத்தங்கள்
MSME நிறுவனங்களுக்கான வர்த்தக வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல்வேறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அரசின் சலுகைகளைப் பெற தகுதி பெற்றுள்ளன. மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் செய்யும் கொள்முதலில் குறைந்தது 25 சதவீதம் மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களிடமிருந்து மேற்கொள்ள வேண்டும் என்ற விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Ease of Doing Business மேம்பாட்டிற்காக 22 Quality Control Orders ரத்து செய்யப்பட்டும், 53 உத்தரவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டும், உற்பத்தியாளர்கள் மற்றும் MSME நிறுவனங்களின் ஒழுங்குமுறை சுமை குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் துறையில், 29 சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு 4 தொழிலாளர் சட்டக் குறியீடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. MGNREGA திட்டத்திற்கு மாற்றாக VB-G RAM G சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இதன் மூலம் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை உறுதி செய்யப்படுவதுடன், பல்வேறு தொழில்நுட்ப நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய–மாநில நிதி விகிதம் 60:40 ஆகவும், சிறப்பு மாநிலங்களுக்கு 90:10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. “சப்கா பீமா சப்கி ரக்ஷா” சட்டத்தின் மூலம் முதலீடு, போட்டி, காப்பீட்டு பரவல் மற்றும் சேவை தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் போக்குவரத்து மற்றும் ப்ளூ எகானமியை வலுப்படுத்தும் வகையில், 5 முக்கிய கடல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. Coastal Shipping Act மூலம் கடற்கரை வர்த்தகத்தின் பங்கு அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதிச்சட்டங்கள்
Securities Markets Code, 2025 மூலம் மூன்று பழைய நிதி சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, SEBI நிர்வாகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், ஓமன், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியா முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. India–EFTA TEPA ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டு, ஏற்றுமதி மற்றும் முதலீடு அதிகரிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து சீர்திருத்தங்களும், இந்தியாவை “விக்சித் பாரத் 2047” இலக்கை நோக்கி உறுதியாக முன்னேற்றும் அடித்தளமாக இருக்கும் என்று மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில், SHANTI Act மூலம் அணு மின்சாரத் துறையில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டதுடன், Viksit Bharat Shiksha Adhishthan மசோதா மூலம் ஒரே உயர்கல்வி ஒழுங்குபடுத்தும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

