கோவை: கோவை மாநகராட்சி சர்வதேச ஹாக்கி மைதானத்தை ஆர்எஸ் புரத்தில் அமைத்து வருகிறது.
இறுதி கட்ட பணிகளை முடித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சான்றிதழுக்காக காத்திருக்கிறது. அண்மையில் முதல் கட்ட பணிகளை நிறைவு செய்த மாநகராட்சி, புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை தரையை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 7.02 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27ம் தேதி துணை முதல்வரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். உலகத் தரத்துக்கு இணங்க ஹாக்கி மைதானம் அமைய வேண்டும் என மாநகராட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இங்கு முதல் கட்டமாக 6,500 சதுர மீட்டர் பரப்பில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சான்றளித்த செயற்கை திடல், 147 ச.மீ அளவிலான உடைமாற்றும் அறை, 17 மீ உயரம் கொண்ட 6 ஹைமாஸ்ட் லைட்கள், திடலை பராமரிக்க பாப்-அப் ரெயின் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் முடிக்கப்பட்டுள்ளன. தரையின் கீழ் வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ‘ஷாக் அப்சார்பர்’ அடுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு குழுவினர் அண்மையில் மைதானத்தை முழுமையாக ஆய்வு செய்து, அதன் தரத்தைப் பாராட்டினர். மதுரையில் உள்ள ஹாக்கி மைதானத்தை விட இங்கு அமைக்கப்பட்டுள்ள திடல் தரம் சிறப்பாக உள்ளது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் இறுதி சான்றிதழ் கிடைத்தவுடன் அரசு அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் மைதானம் திறக்கப்படும்.
அதே நேரத்தில், இரண்டாம் கட்ட மேம்பாட்டு பணிகளுக்கான ரூ.15 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கையையும் மாநகரட்சி தயாரித்துள்ளது.
இரண்டாம் கட்டத்தில் 1,630 பேர் அமரும் திறன் கொண்ட கேலரி,விவிஐபி நுழைவாயில் மற்றும் பால்கனி, நிர்வாக கட்டிடங்கள், ஷவர், உடைமாற்று அறைகள், வீரர்களுக்கான தனி ஜிம், 110 கார்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


