கோவை: இருட்டு கடை அல்வா கடையை மாப்பிள்ளை வரதட்சணையாகக் கேட்பதாக, உரிமையாளர் மற்றும் அவரது மகள் கூறிய குற்றச்சாட்டை அவரது மாப்பிள்ளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், அல்வா கடை உரிமையாளர் மகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
நெல்லையில் பிரபல இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தின் உரிமையாளரின் மகள் கனிஷ்கா. இவருக்கும் கோவையில் வசிக்கும் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுமை செய்வதாகவும், கார் வாங்கிக்கொண்டு, இப்போது அல்வா கடையைக் கேட்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இதுகுறித்து புகாரும் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கனிஷ்காவின் கணவர் பல்ராம் சிங் மற்றும் அவரது தந்தை யுவராஜ் சிங் நேற்று இரவு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பல்ராம் சிங் கூறியதாவது:-
எங்கள் குடும்பம் 4 தலைமுறைகளாக ஏற்றுமதி தொழில் செய்து சொத்துக்களை சம்பாதித்து வைத்துள்ளோம். ஏழு கோவில்களைக் கட்டியுள்ளோம்.
இருட்டுக்கடையை இதற்கு முன் நிர்வகித்து வந்த ஹரிசிங் என்பவரும் சுலோச்சனா பாய் என்பவரும் இறந்துவிட்டனர். அவர்களுடைய மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. அவர்கள் இறந்த பின் தான் கனிஷ்காவின் பெற்றோருக்குக் கடை கைக்கு வருகிறது. ஆனால், முன்பே திருமண சம்பந்தம் எல்லாம் பேசி முடித்துவிட்டோம். எனவே அந்த கடையைப் பார்த்து திருமணத்தை நடத்தவில்லை.
கனிஷ்காவுக்கு பலரிடம் இருந்து இரவு நேரத்தில் போன் வருகிறது. பார்லர் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றால் 4 மணி ஆகிறது. நேரம் கழித்துத் தான் வீட்டுக்கு வருகிறார். இதனை நான் எப்படி கேட்காமல் இருப்பது? கேட்டால் சந்தேகப்படுகிறீர்களா என்ற கோணத்தில் பிரச்சனையைக் கிளப்புகிறார். எனது தாய் தந்தையை ஒருமையில் பேசுவதோடு, போடா வாடா என்று அழைக்கிறார்.
அவர் பேசிய அனைத்தையும் செல்போனில் ரெக்கார்டு செய்து வைத்துள்ளேன்.
டிபன்டர் காரை வரதட்சணையாகக் கேட்டோம் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். அந்த காரை நான் என்னுடைய பெயரில் புக் செய்துள்ளேன். மேலும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்ற தேதியில் என்னுடைய மனைவி சிங்கப்பூரிலிருந்தார்.
அவர்கள் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு எந்த ஒரு முகாந்திரமும், ஆதாரமும் இல்லை. எங்களை ஏமாற்றி இந்த திருமணத்தைச் செய்து விட்டனர். இருந்தபோதிலும் கனிஷ்கா திருந்தி வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.