ஈஷா மண் காப்போம் சார்பில் மார்ச் 8ல் வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் கருத்தரங்கு!

கோவை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் “வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O” எனும் கருத்தரங்கை வரும் மார்ச் 8-ம் தேதி அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடத்த உள்ளது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் கே.பி.ஆர் கல்லூரி பிரதிநிதிகளுடன் இணைந்து பங்கேற்ற “மண் காப்போம்” திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, இந்த கருத்தரங்கு குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

Advertisement

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சத்குருவால் “மண் காப்போம்” இயக்கம் தொடங்கப்பட்டது. வளமான மண் என்றால் மண்ணில் குறைந்தபட்சம் 3% முதல் 6% வரை அங்கக கரிமம் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இது 0.5% க்கும் குறைவாகவே உள்ளது. இந்த நிலை நீடித்தால் விளைநிலங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளதால், மண் வள மேம்பாடு குறித்து உலகளாவிய அளவில் கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் சட்டங்களை உருவாக்கும் நோக்கில் சத்குரு இவ்வியக்கத்தை தொடங்கினார்.

இதற்காக நேரடி கள மாதிரிகளை உருவாக்கும் நோக்கில், குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் மண் வள மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பொருளாதார ரீதியாக எவ்வாறு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு மண் வளத்தை மேம்படுத்த முடியும் என்பது தொடர்பான பல இயற்கை விவசாயப் பயிற்சிகளை மண் காப்போம் இயக்கமும், மரம் சார்ந்த விவசாயம் தொடர்பான பயிற்சிகளை காவேரி கூக்குரல் இயக்கமும் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் மண் காப்போம் இயக்கம் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளது. இதுவரை 40,081 விவசாயிகளுக்கு நேரடிப் பயிற்சிகளும், 1,15,500 பேருக்கு ஆன்லைன் வழியிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சுமார் 61,000 ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளுக்கு வழிகாட்டும் வாட்ஸ்அப் குழுக்களில் 54,226 விவசாயிகள் இணைந்துள்ளனர்.

இதில் நடப்பு 2025-26 நிதியாண்டில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு விவசாயப் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈஷாவின் இயற்கை மாதிரிப் பண்ணைகளில் தங்கி 3 மாத காலப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதன் பலனாக 1,330-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளதோடு, இவ்வியக்கம் மூலம் ₹7.1 கோடி மதிப்பிலான விளைபொருட்களை விற்பனை செய்யத் தேவையான ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுத்து செல்லும் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 1.23 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 24,660 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

Women attending Isha seminar Coimbatore

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களும் தொழில்முனைவோராக ஊக்குவித்து வழிகாட்டும் வகையில் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கு அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

உணவு, மருத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆகிய துறைகளில் சாதனைப் படைத்த பெண் தொழில்முனைவோர்கள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக் கூடிய வணிக யுக்திகள் குறித்து வழிகாட்டும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 2,000 பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வில் பெரியகுளம் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வசந்தன் செல்வம், புதிய தொழில் முனைவோருக்கு அரசு நிதித் திட்டங்கள், கடன்கள் மற்றும் சலுகைகள் குறித்து வழிகாட்ட உள்ளார்.

ராஜிஸ் கிச்சன் நிறுவனர் ராஜாத்தி கண்ணன், மசாலா பொருட்கள் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வருவாய் ஈட்டும் ரகசியங்களை விளக்கிக் கூற உள்ளார். கொற்றவை நிறுவனர் காருண்யா குணவதி, தேங்காய் சிரட்டை கைவினைப்பொருட்கள் குறித்தும் கிராமப்புற பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சமூகத் தொழில்முனைவு குறித்தும் விவரிக்க உள்ளார்.

அதே போன்று பைரவி ஆர்கானிக்ஸ் ஷியாமளா குணசேகரன், ஐந்தடுக்கு பயிர் முறை மூலம் லாபம் ஈட்டுவது குறித்தும் அருவித்தா ஆர்கானிக்ஸ் ஆர்த்தி செல்வகுமார், ஆன்லைன் சந்தைப்படுத்தல் குறித்தும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் தயாரிப்பு குறித்து சில் அண்ட் ஹில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் லதா விளக்க இருக்கிறார்.

இதனுடன் சாமு மைக்ரோகிரீன்ஸ் சாமுண்டீஸ்வரி, மைக்ரோகிரீன்ஸ் வணிகம் குறித்தும் மிராக்கிள் லைஃப் ட்ரீ சயின்ஸ் நிறுவனர்கள் சுஜாதா மற்றும் டாக்டர். குமரன், முருங்கை ஏற்றுமதி மூலம் ரூ.5 கோடி வருவாய் ஈட்டுவது குறித்தும் விளக்கிக் கூற உள்ளனர்.

மேலும் லண்டனில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டாக்டர். ரம்யா ஞானசம்பந்தம், “நஞ்சில்லா உணவே சிறந்த மருந்து” என்ற தலைப்பில் ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து உரையாற்ற உள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் மதிப்புக்கூட்டல் பொருட்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் 6 சிறந்த பெண் தொழில் முனைவோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. விற்பனை கண்காட்சி, வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நவீன பேக்கேஜிங் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் லிங்கில் https://forms.gle/u5323rzZjqJQ8GBd7 பதிவு செய்து கொள்ளலாம், மேலும் தகவல்களுக்கு 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு…

கோவை: கோவை இராமநாதபுரம் பகுதியில் உழைப்பாளர் நலக்கூடம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தபோது, இராமநாதபுரம்...

Video