Header Top Ad
Header Top Ad

குளுகுளு குளியல்…. கம கம சமையல்; கொடிவேரி அணை சுவாரஸ்யம்!

கோவை: கோவை மக்கள் ‘டூர்’ செல்ல ஒரு அருமையான ‘ஸ்பாட்’ கொடிவேரி அணை. இந்த சுற்றுலாத்தலம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

கோவையில் மட்டுமல்லாது கோவையைச் சுற்றி ஒரு சில கிலோமீட்டர்களில் பயணித்தால், பொழுதைக் கழிக்க ஏராளமான சுற்றுலாத் தலங்கள். அப்படியிருக்கும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் கொடிவேரி அணைக்கட்டு.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில், சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இந்த அணை அமைந்துள்ளது.

Advertisement

பவானி சாகர் அணையிலிருந்து வெளியேறி வரும் பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை கட்டப்பட்டுள்ளது.

1,125ம் நூற்றாண்டில் உராளி செம்ப வேட்டுவ செயங்கொண்ட சோழ கொங்கள்வனால் இந்த அணை உருவாக்கப்பட்டது. 151 மீட்டர் நீளம், 30 அடி அகலம் கொண்டது இந்த அணை.

இந்த அணை இருமுறை கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்காக மன்னர் வரும் வேளையில், பெரும் வெள்ளம் ஏற்பட்டு, அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், விரக்தியடைந்த மன்னர் 3வது முறையாக அணையைக் கட்ட உத்தரவிட்டதுடன், தானும், குடும்பத்தினரும் அங்கு வர மாட்டோம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, கட்டப்பட்ட அணை தான் கொடுவேரி அணை என்று வரலாறுகள் சொல்லப்படுவது உண்டு.

கொடிவேலி செடிகள் அடர்ந்த பகுதியில் கட்டப்படும் தடுப்பணை என்பதால், கொடிவேரி அணை என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அணைக்கட்டின் மத்திய பகுதியில் தண்ணீர் குவி மையத்தில் கிணறு போன்ற சுரங்கம் வெட்டப்பட்டுள்ளது. இது அணைக்கான தண்ணீரைத் திறக்கும் இடத்துக்கு அருகே சென்று முடிகிறது.

இந்த அணையில் மணல் மற்றும் சேற்றில் சிக்கி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மணல் போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என பலரும் நம்பிக்கையுடன் குளிக்கலாம். ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கோவையிலிருந்து சுமார் 75 கி.மீ., தொலைவில் உள்ள கொடிவேரி அணைக்கு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சொந்த வாகனத்திலோ, வாடகை வாகனத்திலோ சென்றால், சுமார் ஒன்றரை மணிநேரத்தில் அணைக்குச் சென்றடையலாம்.

கொடிவேரி அணை சிறந்த சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல், சினிமா திரைப்படங்களை எடுக்கும் சூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்துள்ளது. இந்த சுற்றுலாத்தலத்திற்கு நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

சின்னத்தம்பி உள்பட பல படங்கள் இங்கு சூட்டிங் செய்யப்பட்டுள்ளது. கொடிவேரி அணைக்கட்டில் குளுகுளு குளியல் போட்ட பிறகு, அங்கு கமகமவென சுடச்சுட மீன் சமைத்துத் தருவார்கள்.

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்தக் கோடை விடுமுறைக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகும்.

எனவே இந்த சம்மரில் கொடிவேரி செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.

Recent News

Latest Articles