கோவை: கோவையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.
மேலும், தோண்டப்பட்ட இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் போது அதனை முறையாக அமைக்காததால் சாலையில் செல்கின்ற வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை குழியில் லாரி ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட நேரத்திற்குப் பின்பு கிரேன் மூலம் லாரி அங்கிருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி கொண்டு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மற்றொரு லாரி அங்கு கொண்டு வரப்பட்டு அதில் இருந்த செங்கல்கள் மாற்றி எடுத்துச் செல்லப்பட்டன.
கோவையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சாலைகளை அமைக்கும் போது அவற்றை தரமாக அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

