கோவை: கோவையில் உழவர் பெருந்தகையின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நினைவு வளைவு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தினர்கள்.அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் அவரை போற்றுகின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்கள்.
தனது வாழ்வின் இறுதிநாள் வரையிலும் உழவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் உரிமைக்காக உழைத்த நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டில், அவரது பெருவாழ்வைப் போற்றும் வகையில் துடியலூர் கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குருடம்பாளையம் என்.ஜி.ஓ.காலனி இரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் எனவும் அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி இரயில்வே மேம்பாலத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம். வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அடிக்கல் நாட்டினார்.

