கோவை: நீலாம்பூர் – மதுக்கரை இடையேயான இரு வழிச்சாலையை ரூ.1,800 கோடி செலவில் 6 வழியாச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கி.மீ. தூர புறவழிச்சாலை இரு வழியாக அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து நீலாம்பூர் வரை 6 வழியாகவும், மதுக்கரை முதல் வாளையார் வரை 4 வழியாகவும் அமைந்துள்ளது. இடைப்பட்ட நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான 28 கி.மீ. மட்டும் இரு வழியாக 10 மீட்டர் அகலத்துக்கு உள்ளது.
இதை 4 வழியாக அகலப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை பிரிவு கள ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இந்த சாலை கொண்டு வரப்பட்டதால், ஆணையம் ஆய்வு செய்து, ரூ.1,800 கோடி செலவில் 6 வழியாக்க அறிக்கை தயாரித்து, மத்திய நெடுஞ்சாலை அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது. மார்ச் மாதத்துக்குள் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நீலாம்பூர் – மதுக்கரை இரு வழிச்சாலை அமைக்கும்போதே 45 மீட்டர் அகலத்துக்கு நிலம் எடுக்கப்பட்டது. அதனால், 6 வழியாக விரிவுபடுத்த போதுமான நிலம் இருக்கிறது. அதேபோல இருகூர் மற்றும் செட்டிபாளையம் ரயில்வே மேம்பாலங்கள் அகலப்படுத்தப்படும்.
திருச்சி ரோட்டில் சிந்தாமணிப்புதூர் சந்திப்பு, பொள்ளாச்சி ரோட்டில் கற்பகம் கல்லூரி சந்திப்பு ஆகிய இரு இடங்களில் மேம்பாலம் கட்டப்படும்.
பட்டணம்புதூர், வெள்ளலூர் என சுற்று வட்டார கிராம சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள், புறவழிச்சாலைக்கு குறுக்கே செல்லாமல், எதிர் திசை யில் உள்ள ரோட்டுக்கு செல்ல 12 இடங்களில் சுரங்கப்பாதை உருவாக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலாம்பூர், நீலாம்பூர் மதுக்கரை சாலை, கோவை புறவழிச்சாலை, 6 வழிச்சாலை திட்டம், கோவை செய்திக, Neelambur Madukkarai road, Coimbatore highway project, six lane road Coimbatore, road development Coimbatore,

