கோவை: ஒரு மாத காலமாக தண்ணீர் வரவில்லை என்று கூறி கோவை மாநகராட்சி 49 வது வார்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி 49 வது வார்டு பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஒரு மாத காலமாக தண்ணீர் வராமல் அவதிப்படுவதாக கூறி அரசு மகளிர் பாலிடெக்னிக் சாலையில் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மாத காலமாக தண்ணீர் வராமல் மிகவும் சிரமப்படுவதாகவும் இது குறித்து கவுன்சிலரிடம் கூறினார் கண்டு கொள்வதில்லை என்றும் கவுன்சிலர் தங்கள் பகுதிக்கு வருவது கூட இல்லை என்று தெரிவித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்தாலும் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர். தேர்தல் வரும் சமயங்களில் மட்டும் ஓட்டு கேட்டு வருவதாகவும் தேர்தல் முடிந்த தங்கள் பகுதியை எட்டிக்கூட பார்ப்பதில்லை என்று பெண்கள் வேதனை தெரிவித்தனர்.
திடீரென சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

