கோவை: ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் மற்றும் பழங்கள் வந்து குவிந்துள்ளன.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் கடந்த 26ம் தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி முக்கிய திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
கோவை மாவட்டம் கேரளாவுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் கோவை பூ மார்க்கெட்டிற்கு வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும் கோவையில் வசிக்கும் ஏராளமான கேரள மக்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

இதற்காக தற்போது பூ மார்க்கெட்டில் அதிக அளவிலான பூக்கள் வந்து குவிந்துள்ளன.
இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் அன்சாரி கூறியதாவது:-
கோவை பூ மார்க்கெட்டில் இன்று செண்டு மல்லி ரூ.120 முதல் ரூ.150வரையும், வாடாமல்லி ரூ.120 முதல் ரூ.150க்கும், ரோஜா ரூ.300 வரையும், கலர் செவ்வந்தி ரூ.250 வரையும், வெள்ளை சாமந்தி ரூ.400 வரையும் மல்லி ரூ.800 வரையும் விற்பனையாகிறது.
கேரள வியாபாரிகள் ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட மலர் உற்பத்தியாகும் இடங்களுக்குச் சென்றுவிட்டதால் விலை சற்று குறைவாக உள்ளது.

இல்லையென்றால் விலை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கும். தற்போது, மொத்த வியாபாரம் குறைந்து சில்லறை வியாபாரமே நடைபெறுகிறது. என்று கூறினார்.
வாழைப்பழங்கள்
சாய்பாபா காலனியில் உள்ள வாழைக்காய் மண்டியில் பழங்கள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வாழைக்காய் மண்டி தலைவர் அருள்மொழி செல்வன் கூறுகையில்,
கோவைக்கு பூவன், நேந்திரன், கேரளா ரஸ்தாளி, மோரிஸ், நாட்டு ரஸ்தாளி, செவ்வாழை, நாடன் உள்ளிட்ட அனைத்து வகையான பழங்களும் தற்போது விற்பனைக்குக் குவிந்துள்ளன

சத்தியமங்கலம், அன்னூர், பண்ணாரி, மேட்டுப்பாளையம், திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் கோவையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இந்த பழங்கள் விற்பனைக்காக வருகின்றன.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
தற்போது அதிகபட்சமாக செவ்வாழை கிலோ ரூ.55க்கு விற்பனையாகிறது. நேந்திரன் பழம் கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை விற்பனையாகிறது. என்று கூறினார்.