ஆபரேஷன் சிந்தூர்… பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல்… எல்லையில் உச்சக்கட்ட போர் பதற்றம்!

டில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் 9 இடங்களைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சுற்றுலா சென்ற அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

Advertisement

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம், முப்படை தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்தாலோசனை ஆகியவை நடைபெற்றன. இதனிடையே நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் உள்துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்திய ராணுவம் பெயரிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த இந்திய பெண்களின் திலகத்தை நினைவு கூறும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாகிஸ்தானின் முஃசாராபராபாத் பகுதியில் முரித்கி, கோட்லி, சியாக்கோட், குல்பூர், பிம்பர் உள்ளிட்ட 9 இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தைக் குறிவைக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தெரியும் என்றும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று காலை 10 மணியளவில் விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அதிரடி தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் எல்லையில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. லாகூரில் அவசர நிலை பிரகரடனப் படுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் இந்திய விமானப்படை விமானங்கள் தற்போது ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. பஞ்சாபில் எல்லையில் உள்ள இந்திய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றன.

இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகின்றன.

இரு நாட்டு தாக்குதல் நிலைமையைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், போர் பதற்றம் தனியும் என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், நீதி நிலை நாட்டப்பட்டுவிட்டது. ஜெய் ஹிந்த் என்று இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.

Recent News