ஜம்மு: பெஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றவர்களை அங்கு ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். ஒவ்வொருவரிடமும், அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று கேட்டறிந்த பின்னர் இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள், டிரோன் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் பெஹல்காமில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்து, பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பயங்கரவாதிகளின் உருவத்தை என்.ஐ.ஏ., வரைந்துள்ளது. வரையப்பட்ட மூன்று பேரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மத வெறியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பெஹல்காம் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பொதுமக்களை ராணுவம் மீட்கச் சென்றது. அப்போது, ராணுவத்தினரைப் பார்த்து பயங்கரவாதிகள் என்று நினைத்த பொதுமக்கள், “எங்களைக் கொன்றுவிடுங்கள், எங்கள் குழந்தைகளை வாழ விடுங்கள்” என்று கெஞ்சி கதறும் வீடியோ நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.