கோவை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கி, அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு, விதிகளை மீறுவோரிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சி.சி.டி.வி கேமரா உதவியுடனும் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதனிடைய பிரிட்டன், கனடா, பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படும் நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு, எதிர்மறையான மதிப்பெண்களைக் கொடுத்து, அதிகமான எதிர்மறை மதிப்பெண்கள் பெறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
சாத்தியமா?
மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தியாவில் இந்த சட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்றும், ஒரு சில மாநிலங்களில் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்திவிட்டால் விபத்துகள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
விதிகளை மீறி நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுப்பதிலிருந்து தப்பிக்கொள்ள, இப்போதிலிருந்தே நம் ஊர் வாசிகள் பழகிக்கொள்ள வேண்டும்.