பொள்ளாச்சி வழக்கு: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்து கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
வீடியோவில், “அண்ணா அடிக்காதீங்க அண்ணா” என்று கல்லூரி மாணவி கதறும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்தது.
இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி டவுன் போலீசார் விசாரித்தனர். இதில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்குச் சென்றது முதல் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சபரிராஜனின் லேப்டாப் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவர்கள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
9 பேரும் ஜாமின் கோரிய போது, இவர்கள் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் வாய்ப்புள்ளதாகக் கருதிய நீதிமன்றம், யாருக்கும் ஜாமின் வழங்கவில்லை.
இதனிடையே இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வாசித்தார். அதில், 9 பேரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்தார்.

மேலும், இவர்களுக்கான தண்டனை விபரம் நண்பகல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறியதாவது:-
9 எதிரிகளும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்த வழக்கில், கூட்டு பாலியல் (376 D), மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது (376 2 N) உள்ளிட்ட இரண்டு பெரிய குற்றங்களில் இவர்கள் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு குறைந்தபட்சம் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த குற்றத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுரேந்திர மோகன் கூறினார்.