பொள்ளாச்சி வழக்கு: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரையும் சகும் வரை சிறையிலடைக்க அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது கோவை மகளிர் நீதிமன்றம்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அவர்களை நிர்வாணப்படுத்தி விடியோ எடுத்த இளைஞர்கள், அந்த வீடியோவை காட்டி பலமுறை அத்துமீறியுள்ளனர். மொத்தம் 8 பெண்கள் இந்த கொடூரர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சில வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த வழக்கை பொள்ளாச்சி டவுன் போலீசார் விசாரித்த நிலையில், வழக்கு சி.பி.ஐ., வசம் சென்றது.
இதில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என்ற வாதத்தின் அடிப்படையில் 9 பேருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை
இதனிடையே இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வாசித்தார். அதில், 9 பேரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்தார்.
மேலும், 9 பேரையும் சாகும் வரை சிறையிலடைக்க அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகள் 9 பேருக்கும் ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த தண்டனை காலத்தில் எந்த ஒரு நிவாரணமும், சலுகையும் குற்றவாளிகளுக்கு வழங்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடந்த ஒரு கொடூரத்தில், பெண் நீதிபதி ஒருவர் இத்தகைய அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
அரசியல் கட்சியினர், மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.