Header Top Ad
Header Top Ad

பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகள் மேல்முறையீடு செல்ல வாய்ப்பா? வழக்கறிஞர் பேட்டி!

பொள்ளாச்சி வழக்கு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரும் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசு தரப்பு சி.பி.ஐ., வழக்கறிஞர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

Advertisement
Lazy Placeholder

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாக தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சி.பி.ஐ.,யின் முயற்சி வீண் போகவில்லை. நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

9 பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையானது குற்றவாளிகளின் தண்டனையை பொறுத்து ஒதுக்கப்பட்டு உள்ளது

Advertisement
Lazy Placeholder

பாதிக்கபட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமோ, அதற்கேற்ப பிரித்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடைசி வாதத்தில், சாட்சி விசாரணைகளின் அடிப்படையில் வாதங்கள் நடைபெற்றது. விசாரணையில் பெறப்பட்ட அனைத்து சாட்சி மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். நீதிமன்றம் அவற்றை சரி பார்த்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பின் போது நீதிபதி எந்த மேற்கோள்களையும் காட்டவில்லை.

எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனைப் பற்றி நாங்கள் தீர்மானிக்க முடியாது. 30 நாட்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த தண்டனை நிலை நிறுத்தப்படும் என்று தான் நான் நம்புகிறேன்.

இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையாக, சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகள் மற்றும் நிபுணத்துவ சாட்சிகள் இந்த வழக்கில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டன.

இந்த வழக்கு 8 தனித் தனி புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அனைத்தும் ஒரே சம்பவத்துடன் தொடர்புடையவை என்பதால் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டது.

சபரிராசனுக்கு நான்கு ஆயுள் தண்டனைகளும், திருநாவுக்கரசுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், சதீஷ்க்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளும், மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், பாபுவிற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ஹேரேன்பாலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டதற்கு காரணம், அவர் ஐந்து பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தது தான்.

இந்த வழக்கில் மகேந்திரா சாவ்லா வழக்கின் தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு வந்த பிறகு பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

இவ்வாறு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறினார்.

Recent News

Latest Articles