கோவை: போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாடுவதாக பரவும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளதால், நகரை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் நுழைந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு வெள்ளலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சில வீடியோக்கள் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
மேலும், வெள்ளலூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள கால்நடைகளை சிறுத்தை அடித்து கொன்றுவிடுவதாகவும் வதந்திகள் பரவின.
இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வந்த வனத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அது சிறுத்தை அல்ல என்பது தெரியவந்தது.
மக்கள் அச்சம்
இதனிடையே, போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக நேற்று ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோ போத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவியது.
அந்த வீடியோவில், சிறுத்தை போன்ற தோற்றமுடைய ஒரு விலங்கு சாலையின் ஒரு பக்கத்திலிருந்து தாவி காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, பின்னர் ஒரு இடத்தில் பதுங்கி அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
வீடியோ காட்சி
இதுகுறித்து வனத்துறையிடம் விளக்கம் கேட்டபோது, வீடியோவை ஆய்வு செய்த அதிகாரிகள் அது சிறுத்தை அல்ல என்று உறுதி செய்துள்ளனர்.
மேலும், அந்த விலங்கு சிறுத்தையை ஒத்த வடிவில் காணப்படும் காட்டு பூனை எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த தகவலை பகிர்ந்து, அவர்களது அச்சத்தை நீக்க உதவுங்கள்.

