கோவை: கேரளா ஸ்டோரி படத்தை திரையரங்குகளில் திரையிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வணிக வளாக திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இயக்குநர் கமக்யா நாரயண் சிங், இயக்கத்தில், உல்கா குப்தா, அதிதி பாத்யா, ஐஸ்வர்யா ஓஜ்ஷா, சுமித் கல்வாத், அர்ஜன் சிங் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளிலும் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஓடி வருகிறது.
இந்த படம் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாகவும் இஸ்லாமிய மதத்தில் பின்பற்றாதவற்றையெல்லாம் இதில் வேண்டுமென்றே சித்தரித்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினர் அனுமதி மறுத்து அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர், ரஜபுநிஷா இந்த படத்திற்கு கேரளா முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றும் இந்த கதை உண்மையல்ல கேரளாவில் நடந்தது அல்ல என்று பலரும் தெரிவித்து வருவதாக கூறினார். ஆனால் இது பற்றி தமிழக முதலமைச்சர் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் கூறினார்.
நடைபெறாத ஒன்றை வேண்டுமென்றே பாஜக சித்தரித்து இந்த படத்தில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் வேண்டுமென்ற இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொடூரமானவர்கள் போன்று காட்டி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தேர்தலுக்காகவே பாஜக இது போன்ற செய்திருப்பதாகவும் விமர்சித்தார். கேரளாவில் வெறும் மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள் குறைவுதான் என்றும் ஆனால் இந்து மதத்திற்கு அதிகம் பேர் மதம் மாறி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாட்டிறைச்சி என்பது கேரளா தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் தற்பொழுது சாதாரணமாகிவிட்டதாகவும் தெரிவித்தார். விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறினார். திமுக கூட்டணியில் ஐந்து இஸ்லாமிய கட்சிகள் இருக்கும் பொழுது ஏன் முதல்வர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் இஸ்லாமியர்கள் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது என தெரிவித்தார்.



