கோவை: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகைகளை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு இரண்டு டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அவரவர் இல்லங்களில் முக்கனிகளான மா, பலா, வாழையில் கண் விழித்து, புத்தாண்டை வரவேற்றனர். கோவையைப் பொருத்தவரை பல்வேறு கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட உயரமான விநாயகர் சிலை கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலிலும் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சித்திரக்கனியை முன்னிட்டு முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் அன்னாசி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆப்பிள் உள்ளிட்ட பழங்களால் விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 2 டன் எடை கொண்ட பழங்களால் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.