கோவை: ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள சூர்யா நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதியில் 5000க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், ஒர்க் ஷாப்கள், சிறு சிறு நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்பொழுது ரயில் வருவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் இதனால் பள்ளி மற்றும் வேலைகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் எனவே அதனை கடப்பதற்கு மேம்பாலம் வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அதற்காக 26 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மேம்பாலம் கட்டப்படவில்லை. பின்னர் 2021 ஆம் ஆண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று எதிர்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறி அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் தலைமையில் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டுக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு மேம்பாலம் இல்லாததால் ஏற்படும் சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதனைக் குறிப்பிட்டுக் கொண்ட அதிகாரிகள் அப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உரிய நிதியை ஒதுக்கி மேம்பாலம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேம்பாலம் கட்டும் வரை ராமச்சந்திரா சாலையை விரிவு படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.