புஞ்சை புளியம்பட்டி வந்த சாய்பாபா பாதுகை… தொட்டு வணங்கிய பக்தர்கள் பரவசம்…!

சீரடியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி தென் சீரடி சக்தி சாய் ராம் தர்மஸ்தலாவுக்கு கொண்டு வரப்பட்ட சாய்பாபா பாதுகையை பக்தர்கள் பரவசத்துடன் தொட்டு வணங்கினர்.

கோவை அன்னூரை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில், பவானி சாகர் சாலையில் தென் சீரடியில் சக்தி சாய்ராம் தர்மஸ்தலா அமைந்துள்ளது. ஸ்ரீ சக்தி சாய் டிரஸ்ட் இந்த கோவிலை கடந்த 8 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மஹாராஷ்டிர மாநிலம் சீரடியில் இருந்து சாய்பாபாவின் பாதுகை பல்வேறு மாநிலங்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்காகக் கொண்டு செல்லப்படுகிறது.

நீதிபதி அஞ்சு ஷிண்டே, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்கஜ் அஷியா, கோரக்ஷா கடில்கர் ஆகியோர் மேற்பார்வையில் கொண்டு செல்லப்படும் இந்த பாதுகை, கடந்த 22ம் தேதி புஞ்சை புளியம்பட்டி கொண்டுவரப்பட்டது.

டாணாபுதூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே வந்த பாதுகைக்கு ஸ்ரீ சக்தி சாய் டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ஃபேஷன் பாயின்ட் பி.கே.ஜெகநாதன், அறங்காவலர் குழு தலைவர் சித்ரா ஜெகநாதன், நிர்வாகி பி.கே.சண்முகம், பாதுகை தரிசன நிகழ்ச்சியின் செயலாளர் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா அரவிந்த், உதவி செயலர் எம்.பிரமிளா, ஃபேஷன் பாயின்ட் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க,பக்தர்களின் பஜனை பாடல்களுடன் பாதுகை சுப்பிரமணியர் கோவில் வரை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இந்த தெய்வீக ஊர்வலத்தை வருமான வரித்துறை தலைமை ஆணையாளர் என்.ரெங்கராஜ், ஐ.ஆர்.எஸ்., தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 23ம் தேதி காலை ஸ்ரீ சக்தி சாய்ராம் தர்மஸ்தலத்தில் சாய்பாபாவின் பாதுகை பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. காலை முதல் இரவு 9 மணி வரை சாய்பாபாவின் பாதுகையை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தொட்டு வணங்கி பரவசமடைந்தனர்.

தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சாய்பாபா பஜனைகள், மாணவர்களின் பரதநாட்டியம், சென்னையைச் சேர்ந்த சூரிய நாராயணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி டிரஸ்ட், புளியம்பட்டி போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து சாய்பாபா பாதுகை தர்மபுரி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து, சீரடி கொண்டு செல்லப்படுகிறது.

சாய்பாபா பாதுகை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, அதனை தொட்டு வணங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஸ்ரீ சக்தி சாய் டிரஸ்ட் நிர்வாகத்தினருக்கு சாய்பாபா பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...