Header Top Ad
Header Top Ad

நலவாரியத்தில் இணைய சிறப்பு முகாம்; கோவை மாநகர போலீஸ் ஏற்பாடு!

கோவை: கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுனர்களை நலவாரியத்தில் இணைக்கும் முகாமை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை மாநகர போலீசாரின் ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான நலவாரிய பதிவு இலவச முகாம் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தொடங்கி வைத்து, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்.

இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய முகாம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதில் ஆண், பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் 220 பேர் கலந்து கொண்டு நலவாரியத்தில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.பி.ஐ., வங்கி அலுவலர்களும் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான குறைந்த பிரீமியத்திலான இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து, நிகழ்வில் ஆணையர் சரவண சுந்தர் பேசியதாவது:

நல வாரியத்தில் இணைந்த ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கும், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், ஈமச்சடங்கு நிதியும் உள்ளிட்ட பல்வேறு நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும், 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் விபத்தினால் முடங்கியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை ஆட்டோ ஓட்டுனர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சரவண சுந்தர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், காவல் துணை ஆணையர்கள் அசோக்குமார், ராஜ் கண்ணா, சேகர், உதவி ஆணையர் நாகராஜன் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் நாளையும் நடைபெற உள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent News