கோவை: மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், விசைத்தறியாளர்கள் சோமனூரில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 29 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த 5 நாட்களாக சோமனூர் பகுதியில் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை விசைத்தறி இயங்கும் பகுதிகளில் செயல்படும் கடைகளும் அடைக்கப்பட்டன. மறுசுழற்சி பஞ்சாலைகளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடரும் உண்ணாவிரதம்
இந்த நிலையில், விசைத்தறி உரிமையாளர்களை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் போராட்டத்தைத் தீவிரப் படுத்தும் விதமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி செவ்வாய்க்கிழமை இரவு முதலே விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
அரசு விரைவாக இப்பிரச்சனையில் தலையிட்டு கூலி உயர்வு பெற்றுக் கொடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி கூறியதாவது:-
ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியைக் குறைத்து வழங்குவதைக் கண்டித்து நடந்த 28 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இதில் உடனடியாக தலையிட்டு நியாயமான கூலி உயர்வைப் பெற்றுத் தர வேண்டும் கடந்த 28 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் போராட்டம் வலுவடையும்.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு 11 விசைத்தறி உரிமையாளர்கள் விடிய, விடிய உண்ணாவிரத பந்தலிலேயே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை துவங்கினர்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்
இவ்வாறு பூபதி கூறினார்.