கோவை: போதைப்பொருள் வழக்கில் சூடான் வாலிபருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது
சூலூர் போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஜிகேஎஸ் நகரில் சந்தேகம்படும் படி, நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்ததில், அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 85 மில்லி கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், சூடான் நாட்டை சேர்ந்த அல்பெரா அலி முகமது (25) என்பது தெரியவந்தது.
இவர், சூலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி-பார்ம் படித்து வந்துள்ளார். ஆனால், விசா காலம் முடிந்தும் அவர் சட்டவிரோதமாக தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 4-வது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், அல்பெரா அலி முகமது மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி விக்னேஷ் மது தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.

