கோவை: இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசின் ஆட்சி காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மாறி மாறி தங்களது திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகின்றன.
பொங்கல் பரிசுத்தொகை:
இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்க முடிவு செய்துள்ளது. இதனுடன், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைகளுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு, கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கலுக்கு தலா ரூ.2,500 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டிருந்தது.
இதனால் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5,000 வரை ரொக்கம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களால் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதை காரணமாகக் காட்டி, அதிகளவு ரொக்க வழங்கலுக்கு நிதித்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கக்கூடிய ரொக்கத் தொகை, அதற்கான மொத்த செலவு மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையிலேயே, தலா ரூ.3,000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

