சென்னை: பத்திரப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் நடைபெறும் குளறுபடிகள் மற்றும் மோசடிகளைக் களையும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி, அசல் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும். நாம் பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்குச் செல்லும் போது அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
பத்திரப்பதிவு 2026
ஒரு குறிப்பிட்ட சொத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்யும் போது, அந்த சொத்து அடமானத்தில் இருந்தால், அந்த அடமான உரிமையாளரின் தடையில்லா சான்று இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படமாட்டாது.
பூர்வீக சொத்துகளின் மூல ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், அது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். மேலும், பத்திரப்பதிவின் போது காவல் துறை வழங்கிய கண்டறிய முடியாத சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இத்துடன், அசல் ஆவணம் தொலைந்ததை அறிவிக்கும் விதமாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டிருக்க வேண்டும். அந்த அறிவிப்பு அசலையும் பத்திரப்பதிவின் போது கொண்டு வர வேண்டும்.
மோசடிகளைத் தடுக்கும் விதமாக இதுபோன்ற சட்டத்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்த நடைமுறைகள் அமலாகியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை இணையதளத்தைப் பார்க்கலாம்: https://tnreginet.gov.in/portal/

