சூலூர் அருகே பரபரப்பு- மின் கம்பத்தில் மோதி தீ பற்றி எரிந்த லாரி

கோவை: கோவையில் கம்பத்தில் லாரி மோதி தீ விபத்து ஏற்பட்டது.

சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டியில்இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், கருமத்தம்பட்டியிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது பலமாக மோதியது.

மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் மின் கசிவு ஏற்பட்டு, லாரியின் முன்பகுதி திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

நிலைமையை உணர்ந்த ஓட்டுநர், லாரி முழுமையாகத் தீப்பிடிப்பதற்குள் சுதாரித்துக் கொண்டு கீழே குதித்தார். இதனால் அவர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி லாரியில் பற்றி எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

விபத்து குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லாரி தீ பற்றிய வீடியோ அங்கிருந்த பொதுமக்கள் செல்போன்களில் படம் பிடித்து வலைதளங்களில் பதிவிட்டதால் வீடியோ வைரலாகி வருகிறது.

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp