கோவை: கோவையில் பக்கத்து வீட்டு சிறுமையை வளர்ப்பு நாயை வைத்து கடிக்க வைத்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கே ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் அங்கு உள்ள L பிளாக்கில் பொன்வேல் (வயது 33) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் இவருக்கு 5 வயதில் மகள் மற்றும் 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. மகள், அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் சௌமியா என்பவர் (வயது 50) வசித்து வருகிறார். சௌமியா வீட்டில் 4 நாய்களை வளர்த்து வந்து உள்ளார்.
சிறுமிக்கு நாய்க்கடி
இந்த நிலையில் இவர் வளர்த்த நாய்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு சிலரைக் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால், சௌமியா தொடர்ந்து நாய்களுக்கு உணவு அளித்து வீட்டிற்கு உள்ளேயே வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று, பொன்வேலின் மகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சௌமியா அவரை வேறு இடத்திற்குச் சென்று விளையாடும் படி கூறியுள்ளார். ஆனால், சிறுமி விளையாடுவதை நிறுத்தவில்லை. அப்போது சௌமியா தன் வீட்டில் வளர்த்த நாயை விட்டு சிறுமியைக் கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
அலறல்
இதனால் சிறுமி வலியில் கதறினார், சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டினர். பிறகு இது குறித்து பொன்வேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே விரைந்து வந்து சௌமியாவிடம் நாயை விட்டு மகளைக் கடிக்க வைத்தது குறித்து தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சௌமியா அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பொன்வேல் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பிறகு சௌமியா மற்றும் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சௌமியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் சிறுமியைக் கடித்த நாய் குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியைக் கடித்த நாய் மேலும் சிலரை கடித்து உள்ளது என்பதால், அவர்கள் அந்த நாயை தனியாக பராமரித்து அதை கண்காணித்து வருகிறார்கள்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமையை வளர்ப்பு நாயை விட்டு கடிக்க வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.