கோவை: கோவையில் ஆட்டோக்களை குறிவைத்து திருடி வந்த இளைஞரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலிங்க ராஜா. இவர் அதே பகுதியில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஜெயலிங்க ராஜா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். ஆட்டோக்களை குறிவத்து திருடும் நபரைப்பிடிக்க ஆய்வாளர் ஞானசேகர் தலைமையில், உதவி ஆய்வாளர் பாலசதீஸ் கண்ணன், தலைமை காவலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், கார்த்திகேயன் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கீரனத்தம் பகுதியில் ஆட்டோவை திருடி சென்ற நபரை கைது செய்துள்ளனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோவை திருடியது கோவை மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும், இவர் தொடர்ந்து ஆட்டோவை திருடும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பாலமுருகனிடம் இருந்த இரண்டு திருட்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.