கோவை: முதலமைச்சர் ஜெர்மனி செல்ல வேண்டிய அவசியம் என்ன? அது ஒரு ரிட்டயர்மென்ட் ஹாலிடேவாக எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்று கோவையில் பாஜக நிர்வாகி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி முடிந்து ஐந்தாவது நாளான இன்று கோவை மாநகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் காந்திபார்க் அடுத்த முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன.
முன்னதாக பூமார்கெட் தெப்பக்குளம் மைதானத்தில் இருந்து இந்து முன்னனி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிர்வாகி அண்ணாமலை, பேசியதாவது:
சென்னிமலை, மதுரை திருபரங்குன்றம் ஆகிய இடங்களில் என்ன நடந்தது என்று பார்த்தோம்
அதனைத் தொடர்ந்து முருக பக்தர் மாநாடு நடந்தது. இது எல்லாம் தமிழகத்தில் ஆன்மீகம் மக்கள் மனதை எந்த அளவிற்கு கவர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறி.
காவல்துறையில் ரிட்டயர்மென்ட் ஆபவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 2026ல் ரிடெய்ர்மென்ட் அதற்காக அவர் வெளிநாடு செல்வதாக இருந்தா சரியாக இருக்கும்
தி.க., வினர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறார்கள். அவர்களுடன் திமுக.வினரும் உள்ளனர். தி.மு.க.,வினர் தாமாக கோவில் முன்பு உண்டியல் வைக்கிறார்கள். அரசியல் மாற்றம் வந்தால் தான் இந்த மதத்திற்கு பாதுகாப்பு.
செப்டம்பர் 10ல் ஐயப்பன் மாநாட்டை கேரள அரசு நடத்துகிறது. இங்கு தி.மு.க., அரசு முருகனுக்கு மாநாடு நடத்தினார்கள். அதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வீடியோ கான்பிரன்சில் கலந்து கொண்டு நாடகம் போட்டார்கள்.
நம்முடைய (இந்து அமைப்பினர்) வேலையை அவர்கள் கையில் எடுத்து எப்படி பவுடர் அடிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தி.மு.க., வரக்கூடிய நாட்களில் கவர்ச்சிகர விஷயங்கள் கூறுவார்கள் அதனை நம்பி விடாதீர்கள்.
காவல்துறையில் டிஜிபி இல்லாமல், பொறுப்பு டிஜிபி என்றால் எப்படி விளங்கும்?
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “மத்திய அரசின் அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள நகரங்களில் சென்னை நகரம் 31 நகரங்களில் 26 வது நகரமாக உள்ளது.
இதற்கெல்லாம் தி.மு.க., அரசு தலைகுனிய வேண்டும்
37 சதவிகிதம் மாணவர்கள் தான் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கின்றனர். 62.1% மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கின்றனர். தி.மு.க., அரசு வந்த பிறகு 5% மாணவர்கள் அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார்கள்.
உத்தரப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அதிக நிறுவனங்கள் செல்கின்றன. தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்த்ததற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெர்மனி செல்ல வேண்டிய அவசியம் என்ன? அது ஒரு ரிட்டயர்மென்ட் ஹாலிடேவாக எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.