கோவை: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற மனநிலைக்கு முதல்வர் வந்துவிட்டார் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்…
கோவை எட்டிமடை பகுதியில் பாஜக சார்பில் மாநில மகளிர் அணி பயிற்சி முகாம் இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மகளிர் அணி சார்பில் கட்சியின் வளர்ச்சிக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார். மேலும் மகளிர் அணியில் சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், இந்த வருடத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
நாளை மாலை வரை இந்த பயிற்சி நடைபெறும் என்றும் இதில் பல்வேறு அமர்வுகள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் மத்திய அரசாங்கத்தின் மகளிர் நலத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படுவதாக தெரிவித்தார். இளம் பெண்கள் எவ்வாறு அவர்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வது? RSS இயக்கத்தின் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள், பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு, பெண்கள் எவ்வாறு அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமன் செய்து கொள்வது போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஒரு அமர்வு இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் இன்றைய அரசியல் சூழலில் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது எவ்வாறு எதிர்கொள்வது என்று பயிற்சி அளிக்க இருப்பதாகவும் கூறினார்.
நாளை நிறைவு உரையாக மாநிலத்தின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் வழிகாட்டு இருப்பதாகவும் மேலும் நாளை தமிழிசை சௌந்தரராஜன், கார்த்திகாயினி போன்றவர்களும் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த பயிற்சி முகாம் என்பது மகளிர் அணியை தேர்தலுக்காக தயார்படுத்துவது மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அவர்களுடைய பங்களிப்பை அதிகப்படுத்துவது மேம்படுத்துவது என்ற நோக்கில் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு அரசியல் கட்சி பயிற்சி முகாம்களை நடத்தும் பொழுது தேர்தலையும் மனதில் வைத்துக் கொண்டுதான் நடத்தும் என்றும் எங்களுடைய பயிற்சி முகாமிலும் தேர்தல் காலத்தில் எவ்வாறு பணி செய்வது தேர்தலை எவ்வாறு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் ஆகிய பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
SIR திட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றும் அதனால் தான் மக்கள் தாமாக முன்வந்து படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள் என்றும் மக்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை திமுக கட்சிக்காரர்களிடமும் பிரச்சனை இல்லை என்று கூறிய அவர் திமுக கட்சி தலைமை மட்டும் தான் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு டிராமாவை செய்து வருவதாக தெரிவித்தார்.
ஈரோட்டில் விஜய் திமுக தீய சக்தி தமிழக வெற்றி கழகம் தூய சக்தி என்று பேசி இருப்பது தொடர்பான கேள்விக்கு விஜய் அதனை பல நாட்களாக கூறி வருவதாகவும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தானே உள்ளது பார்க்கலாம் என தெரிவித்தார். விஜய் அரசியல் கட்சியாக தற்பொழுது தான் வந்திருப்பதாகவும் அவர் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை என்று தெரிவித்த அவர் யாருடைய குணாதிசியத்தை எப்படி மக்கள் புரிந்து வைத்துக் கொள்கிறார்கள் என்று புரிவதற்கு விஜய்க்கு தற்பொழுது அனுபவம் தேவைப்படக்கூடிய காலம், எனவே ஒரு தேர்தல் முடியட்டும் அதன் பிறகு கூறுகிறோம் என தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஆனால் எங்களுடைய புதிய தேசிய செயல் தலைவர் வருகை என்பது இன்னும் இரண்டு நாட்களுக்குள் இருக்கும் என்கின்ற தகவல் வந்து இருப்பதாகவும் அந்த மாநிலத்திலிருந்து தகவல்கள் வெளிவரும் என கூறினார். வானதி சீனிவாசன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று டெல்லியில் இருந்து லிஸ்ட் வரும் பொழுது தெரியும் என்றும் கூறினார். பூ மார்க்கெட் பகுதியில் கடை விஷயங்களில் சில சிக்கல்கள் இருந்தது நீதிமன்றத்தை நாடி தற்பொழுது பிரச்சனைகள் தீர்ந்து கடைகள் நடத்துகிறார்கள் என்று தெரிவித்த அவர் கடைகளாக நடத்துபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் சாலையோரம் பூக்கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சியின் அனுமதி அட்டை வைத்திருந்தால் அவர்களை அப்புறப்படுத்த முடியாது என தெரிவித்தார். அனுமதி அட்டை இருந்தால் காவல்துறை அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் நடைபாதை வியாபாரிகளுக்காக பிரதிநிதிகள் மாநகராட்சி கூட்டங்களில் பங்கெடுப்பதற்கு முன்பெல்லாம் வாய்ப்பு இருந்ததாகவும் ஆனால் தற்பொழுது அதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு கூட்டத்தையும் நடத்துவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர் அதனால் சாலையோர வியாபாரிகள் அவர்களது குறைகளை மாநகராட்சி இடம் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைப்பதில்லை என தெரிவித்தார். திமுக அரசாங்கத்தில் இது போன்ற கஷ்டங்களை எல்லாம் அனுபவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்கு கோபி தளபதி என்று பட்டம் வழங்கப்பட்டது குறித்தான கேள்விக்கு பட்டம் கொடுப்பதற்கும் பட்டத்தை வாங்கி கொள்வதற்கும் இந்த நாட்டில் அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் அந்த பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா கொடுப்பவர் யார் வாங்குபவர் யார் என்பதில் தான் அந்த பட்டத்தின் மதிப்பு உள்ளது என தெரிவித்தார். மேலும் மக்களின் தீர்ப்பு தான் அந்த பட்டத்தின் மதிப்பு என்று பாஜக பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் தலைவர்கள் பாஜகவின் மத்திய அமைச்சர்களை சந்திப்பதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா எந்த பிரச்சினையும் கிடையாது நாங்கள் அனைவரும் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று குறிப்பிட்ட அவர் பாஜக மத்திய அமைச்சர்களை யார் சந்தித்தார்களோ அவர்களிடம் தான் எதற்காக சந்தித்தீர்கள் என்று கேட்க முடியும் என்று தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். புதிதாக ஏதேனும் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு பொங்கல் வந்ததும் நல்ல செய்தி வரும் என்று பதிலளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் முதலில் எதில் நிபுணர்? என்று கேள்வி எழுப்பிய அவர் ஏதேனும் ஒரு வேளையில் நான் நிபுணத்துவம் பெற்றவன் என்று அவரால் கூற முடியுமா அதிகமான விஷயங்களில் அவர் எக்ஸ்போஸ் ஆகி வருகிறார் SIR விஷயத்தில் கூட அவர் புரியாமல் பேசுவதாக பலரும் கூறினார்கள் எனவே தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை விமர்சிப்பதற்கும் அவர்களது தோல்விகளை மறைப்பதற்கும் உதயநிதி ஸ்டாலின் ஏதாவது ஒரு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருவதாக கூறினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் எந்த நிபுணத்துவத்தை பெற்ற துணை முதல்வராக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். கோபாலபுரம் குடும்ப வாரிசாக பிறந்ததை தவிர அவருக்கு வேறு ஏதாவது துணை முதலமைச்சர் ஆவதற்கு சிறந்த தகுதி உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அந்தக் குடும்பத்தில் பிறந்தார் அதனால் அந்த வரிசை கிடைக்கிறது நாற்காலி கிடைக்கிறது அவரைவிட சீனியர் தலைவர்கள் அந்த கட்சிக்கு தியாகம் செய்தவர்கள் எல்லாம் இவருக்கு நாற்காலி எடுத்துப் போடுகின்ற சூழல் இருக்கிறது என்று சாடினார்.
பொங்கல் நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும் ஆனால் அதற்கான தகவல் இன்னும் அங்கிருந்து வரவில்லை என்று தெரிவித்தார். பொங்கலுக்கு பிரதமர் மோடி கோவைக்கு வருவதாக தெரியவில்லை ஆனால் வேறு ஏதேனும் ஒரு ஊருக்கு அவர் வரலாம் என்று கூறினார். யாரைப் பார்த்தாலும் முதலமைச்சருக்கு எதிரியாக தான் தெரிகிறார்கள் என்றும் ஊடகவியலாளர்கள் விமர்சனம் வைத்தால் இந்த அரசாங்கம் காணாமல் போய்விடுமா ஏதேனும் விமர்சனம் செய்தால் உடனடியாக சிறையில் அடைக்கிறார்கள் சமூக ஊடகத்தில் ஏதேனும் விமர்சனம் செய்தால் உடனடியாக கைது செய்கிறார்கள் என்று தெரிவித்த அவர் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் முதலமைச்சர் யாரைப் பார்த்தாலும் எதிரியாக பார்க்கக்கூடிய ஒரு மன நிலைக்கு வந்து விட்டார் என்று தெரிவித்தார்.

