கோவை: கோவை மாநகராட்சியில் பொதுக் கழிப்பறைக்கு தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தற்போது அப்பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 95வது வார்டு அண்ணா நகர் பகுதியில் பொதுக்கழிப்பறை உள்ளது. சமீபத்தில் இந்த கழிவறைக்கு பெயின்ட் அடிக்கப்பட்டது.
இதனிடையே கழிவறையின் முன்பக்க சுவரில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பெயரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கனின் பெயரும் எழுதப்பட்டது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளானது. கழிப்பறைக்கு மூத்த தலைவர்கள் பெயர் வைத்ததற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது அப்பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன.