கோவை: புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று உக்கடம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்ததால் பல்வேறு கடைகள் வெறுச்சோடி காணப்பட்டன.
வருடம் தோறும் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி கடைகளிலும் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். புரட்டாசி மாதத்தில் விரதம் இருபவர்கள் விரதத்தை முடித்து இறைச்சிகள் மற்றும் மீன்களை வாங்கி செல்வர்.

ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதம் முடிந்த உடனேயே தீபாவளி பண்டிகை வருவதால், முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பல்வேறு மீன் கடைகள் வெறுச்சோடி காணப்பட்டன. சில கடைகளில் மட்டும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அதே சமயம் புரட்டாசி மாதத்தை விட தற்போது மீன் வரத்து குறைந்துள்ளதால் விலை சற்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .
மத்தி கிலோ 80-250 ரூ, வாவல் 250-500ரூ, பாறை 240- 350ரூ, வஞ்சரம் 450-700ரூ, நண்டு- 500ரூ, அயிலை 120 ரூ க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
புரட்டாசி மாதத்தில் மீன் வரத்து அதிகமாகவும் விலை குறைவாகவும் இருந்ததாகவும் ஆனால் தற்போது மீன் வரத்து குறைவானதால் விலை சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நாளை தீபாவாளி பண்டிகை என்பதால் மக்கள் குறைவாகவே வருவதாகவும் நாளை துவங்கி மக்கள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தனர்.


