கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் புகையிலை பொருட்களை மக்கள் எடுத்து செல்வதை தடுக்க பைரவா எனும் மோப்ப நாயை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
தென்னிந்தியாவின் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை பாதை கடந்த பிப்ரவரி 1, 2026 அன்று திறக்கப்பட்டது. இந்த பாதை 4 மாதங்களுக்கு திறந்திருக்கும் என்று வனத்துறை சார்பில் கூறப்பட்டது.
வெள்ளியங்கிரி மலைக்கு இந்த மாதங்களில் மக்கள் பெருமளவில் சென்று வருவது வழக்கம். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளாக நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவக்குழுக்களும் தன்னார்வலர்களும் பக்தர்களுக்கு உதவும் வண்ணம் களமிறங்கியுள்ளனர்.
மேலும் பூண்டி அடிவாரத்திலேயே பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்திற்காக வரும் நிலையில் ஒவ்வொரு பக்தரையும் தனித்தனியாக முழுமையாக சோதிப்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
என்னதான் சோதனை செய்தாலும் சிலர் போலீசாரை ஏமாற்றி பீடி,சிகரெட் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் பக்தர்கள் அங்கேயே அந்த தீயை அணைக்காமல் போட்டு விடுகின்றனர். இதனால் காட்டு தீ பரவி சேதம் ஏற்பட்டு வந்தது.
இதனிடையே வனத்துறையின் பைரவா எனும் நாய் தற்போது இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த பைரவா நாய், அங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களையும் மோப்பம் பிடிக்கிறது. அவர்கள் பீடி சிகரெட் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை தங்கள் உடலிலோ அல்லது உடமைகளுக்குள் எங்கேனும் மறைத்து வைத்திருந்தால், இந்த பைரவா அதனை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து விடுகிறது.
இப்படி வனத்துறையினர் அதனை எளிதில் பறிமுதல் செய்கின்றனர்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பைரவா நாய் உதவியுடன் பக்தர்களை பரிசோதிக்கும் இந்த முயற்சி நல்ல பலனை கொடுக்கிறது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சமூக அக்கறையுடன் பக்தர்கள் யாரும் மலையேற்றம் செல்லும் போது தீப்பெட்டி உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், வனத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

