கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கோவை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்காமல் துணை வேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். இதனிடையே இம்மாநாட்டில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தமிழகம் வந்துள்ளார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.40 மணியளவில் கோவை வந்த ஜெகதீப் தன்கரை அமைச்சர் கயல்விழி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் செந்தில்குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆகியோர் வரவேற்றனர்.
இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் அவர் உதகை சென்றார். இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, அன்றைய தினமே டெல்லி புறப்படுகிறார். குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.