கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைபை வசதியுடன் கூடிய காத்திருப்போர் அறையை காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று திறந்து வைத்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிக்க வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோருக்கு காத்திருப்போர் அறை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புகார் அளிக்க வருவோர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வைபை வசதியை உபயோகித்துக் கொள்ளும் வசதியுடன் காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டது. இதனை இன்று காவல் ஆணையர் சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்காக காத்திருப்போர் இடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசின் திட்டமான இலவச WiFi வசதியும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இணையம் வழியாக புகார் அளிப்பதற்கு இதனைப் பயன்படுத்தலாம். இது அரசுத் திட்டம் என்பதால் தைரியமாக இதனைப் பயன்படுத்தலாம்.
ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவி தற்கொலை குறித்து துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மத போதகர் ஜான் ஜெபராஜ் வழக்கில் சிறுமி அளித்த புகாரின் பேரில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் இந்த வழக்கில் இல்லை. என்றார்.

காவல் நிலையங்களில் இளைஞர்கள் ரீல்ஸ் எடுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் பொதுமக்களும் இளைஞர்களும் ரீல்ஸ் மோகத்தில் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.