கோவை: மே 7ம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 25 இந்தியர்கள் உட்பட 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முப்படைத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் போர்ப் பயிற்சியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், போர் ஒத்திகையில் ஈடுபட மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் மே 7ம் தேதி நாடு முழுவதும் இந்த ஒத்திகையை நடத்தத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஒத்திகையின்படி, வான்வெளி தாக்குதல் நடைபெறும் நேரத்தில் அபாய ஒலியை ஒலிக்கச் செய்தல், அவசர காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல், போர்க்கலங்களி மக்கள் எப்படிச் செயல்பட வேண்டும் உள்ளிட்டவற்றை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிவில் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், சைரன்கள் மூலம் மக்களை எச்சரிப்பது, பாதுகாப்பான பகுதிகளைத் தேர்வு செய்வது உள்ளிட்ட ஒத்திகைகளிலும் ஈடுபட மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

போர்க்கால ஒத்திகைகள் மே 7ம் தேதிக்கு பிறகா? அல்லது மே 7ம் தேதி முதலா? என்ற விவரங்கள் இல்லாத போதிலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கும் இந்த சூழலில் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.