மக்கள் விரும்பும் மாவட்டமாக கோவை இருப்பது ஏன்? காரணங்கள் இதோ!

கோவை : பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கோவையில் குடியேற விருப்பம் தெரிவிப்பது ஏன்? என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்குகிறது நமது கோவை மாவட்டம். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய நகரமாகவும் விளங்குகிறது. வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், காலநிலை உள்ளிட்ட காரணிகளே இந்த மாவட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பக் காரணம்.

அரசு அதிகாரிகள், பெருநிறுவனங்களில் பணியாற்றுவோர் பலரும் தங்கள் ஓய்வு காலத்திற்குப் பிறகு கோவையில் குடியேறி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கோவையில் முதியவர்களுக்கான வாழ்விடங்களை அமைத்து வருகின்றன. மேலும், கல்வி, வேலைவாய்ப்புகளிலும் கோவை மேம்பட்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளில் கோவையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

Cbe Junc

சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் (MSME) தலைநகரம் என்று நமது கோவையைக் கூறலாம். நூற்பாலைத் தொழில்கள், பம்ப் உற்பத்தி நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி மையங்கள், வளர்ந்து வரும் ஐ.டி துறை மற்றும் விவசாயம் என்று பல்துறைகள் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இதனால் சென்னை அல்லது பெங்களூரு போன்ற நகரங்களுக்கு மாற்றாக கோவையை தேர்வு செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

கோவை என்றாலே க்ளைமேட் என்று கூறும் அளவிற்கு கோவையின் சீதோஷன நிலையை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். கடுமையான வெப்பம் அல்லது அதிக ஈரப்பதம் இல்லாத இதமான காலநிலை கோவையின் பெரிய பலமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் தாக்கம் காரணமாக ஆண்டு முழுவதும் சீரான வானிலை நிலவுகிறது. இதுவே ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்பங்களின் விருப்ப நகரமாக கோவையை மாற்றியுள்ளது. சமீப காலத்தில் கோவையில் கோடைகாலத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. இருந்தபோதிலும், மற்ற காலங்களில் கோவை மக்கள் சில்லென்றே வாழ்கின்றனர்.

Cbe Climatre

கல்வித் துறையில் கோவை முக்கியப் பங்கு வகிக்கிறது. கோவையில் எங்கு திரும்பினாலும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப இங்கு கல்வி வழங்கும் நிறுவனங்கள் பல உள்ளன. பள்ளிகளைப் பொருத்தவரையில் ஸ்டேன்ஸ், எஸ்.எஸ்.வி.எம், பிவிஎம் என பிரபலமான பள்ளிகளும், பிஎஸ்ஜி, குமரகுரு, ஸ்ரீ கிருஷ்ணா, ஹிந்துஸ்தான் போன்ற முன்னணி கல்லூரிகளும் இங்குள்ளன. இதனால் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.

PSG

தரமான கல்வி கிடைப்பதால் ஒவ்வொரு வருடமும் கல்வி பயிலும் வெளிமாநில, மாவட்ட மாணவர்கள் அதிகரித்து காணப்படுகின்றனர். இது கோவையில் பொழுதுபோக்கு, உணவு விஷயங்களையும் மேம்படுத்தி வருகிறது.

மருத்துவ சேவைகளிலும் கோவை முன்னிலையில் உள்ளது. கேஎம்சிஎச், பிஎஸ்ஜி, கங்கா, கேஜி, குப்புசாமி நாயுடு உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் பல்துறை மருத்துவத்தை வழங்குகின்றன. மேலும், கோவையில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து வித நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்கும் தனிச்சிறப்புடன் செயல்படுகிறது. மேற்கு மாவட்டங்களின் மருத்துவமனைகளுக்கே முன்னோடியாகவும் செயல்படுகிறது. கேரளா உள்ளிட்ட மாநில மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

Ganga

வயதாகும் நேரத்தில் உடனடி சிகிச்சை தேவைப்படும் முதியவர்கள் அதிகளவில் கோவை வந்து தங்குவதற்கு இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வசதிகளும் ஒரு காரணமாக உள்ளது. பல தனியார் மருத்துவமனைகளால் அரிய வகை நோய்களை குணப்படுத்தி சாதனையும் படைத்துள்ளனர்.

பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கோவை சுத்தமான மற்றும் ஒழுங்கான நகரமாக கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் குறைவாகவும், மக்கள் வாழ்க்கை முறை அமைதியாகவும் உள்ளது. பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழல் கோவையில் உள்ளது. தேசிய குற்ற காப்பக ஆவணத்தின் படி, கோவையில் குற்றங்கள் குறைவாக நடைபெறுவது தெரியவந்துள்ளதால் வெளியூரைச் சேர்ந்த மாணவிகளும், பெண்களும் அச்சமின்றி கோவை வந்து தங்குகின்றனர். சுகாதார விஷயத்தில் மாநகராட்சி செலுத்தும் கவனம் அதிகரிக்கத் தொடங்கியது நமக்குக் கிடைத்த ப்ளஸ் என்று சொல்லலாம்.

Cbe Smart

கோவையில் புகழ் பெற்ற ஆன்மிக ஸ்தலங்கள் உள்ளதால், மற்ற மாநில, மாவட்ட மக்கள் அதிகம் விரும்பும் நகரமாக உள்ளன. குறிப்பாக மருதமலை, குருந்தமலை, காரமடை அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஈச்சனாரி, கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன், மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில், ஈஷா யோகா மையம், பொன்னூத்தம்மன் கோவில், பாலமலை போன்ற பல கோவில்கள் உள்ளன. பக்தி பரவசத்துடன் சிறப்பு நாட்களில் இந்த கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

Maruthamalai

கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவை இயற்கை அழகு. கோடை காலத்தில் குதூகலிக்க மக்களுக்கு ஏற்ற இடமாக ஊட்டி, வால்பாறை, சிறுவாணி நீர்வீழ்ச்சி, சித்திரைச் சாவடி, மேட்டுப்பாளையம் பவானி ஆறு என அடுக்கிக் கொண்டே போகலாம்.

Siruvani

இயற்கை வளம் அதிகமாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பயணிப்பதே ஒரு அலாதியான இன்பத்தை கொடுக்கும். வார இறுதி நாட்களில் சுற்றுலாவுக்கு ஏற்ற தளங்களாக இவை அமைந்துள்ளன.

Race course

மாலை நேரங்களில் காற்று வாங்கவும், நடைபயிற்சி மேற்கொள்ள உக்கடம், குறிச்சி, ரேஸ்கோர்ஸ் போன்ற இடங்கள் ஏற்றதாக உள்ளன. இதுதவிர கேரளா கோவையின் அருகே உள்ளது. பீச் போன்ற சுற்றுலா தளங்கள் சில மணி நேரங்களில் சென்றுவிடும் தூரத்தில் உள்ளன.

கோவையில் ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டு குடியிருப்பு திட்டங்களைக் கொடுக்கின்றன. மக்களுக்கு பல்வேறு வசதிகளுடன் நிறைய ஆப்ஷன்கள் கிடைக்கிறது. ஒவ்வொருவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில், சிறப்பம்சங்களுடன் கோவையில் வீடு, நிலம் வாங்கிவிட முடியும். அனைத்து வசதிகளும் சில நிமிட தொலைவிலேயே கிடைத்துவிடும் என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் கோவையில் இடம் வாங்கத் தொடங்கியுள்ளனர். மேலும், ஐ.டி பூங்காக்கள், புதிய சாலை திட்டங்கள் ஆகியவை வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களும் நடுத்தர வர்க்க குடும்பங்களும் கோவையை எதிர்கால வளர்ச்சியின் நகரமாக பார்க்கின்றனர்.

Real Estate

வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மேம்பட்ட மருத்துவம், மிதமான காலநிலை, இயற்கை வளம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை முறை இவை அனைத்தும் இணைந்து கோவையை வாழ்வதற்கு சிறந்த நகரமாக மாற்றியுள்ளன. நகர வாழ்க்கையின் சுறுசுறுப்பையும், அமைதியான சூழலையும் ஒருசேர விரும்பும் மக்களுக்கு கோவை ஒரு சிறந்த தேர்வாக திகழ்கிறது.

நீங்கள் கோவையைத் தேர்ந்தெடுத்து வாழக் காரணங்கள் என்னென்ன? கீழே உள்ள கமெண்டில் பதிவிடுங்கள் வாசகர்களே.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.