கோவை: கோவை விமான நிலையத்தில் இளம் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாட்டிற்குள் 30க்கும் மேற்பட்ட விமானங்களும், வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10,000க்கும் மேற்பட்ட பயணிகளும், பயணிகளை வழியனுப்ப, வரவேற்க உறவினர்களும் வந்து செல்கின்றனர்.
இதனிடையே நேற்றிரவு சென்னையிலிருந்து கோவை வந்த விமானத்தில் இறங்கி, ஒரு ஜோடி வந்தது. அப்போது வெளியே காத்திருந்த இளம் பெண் ஒருவர், அந்த ஜோடியிடம் தகராறு செய்தார்.
அப்பொழுது, சக பயணிகள் முன்பு, “என்னைத் திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரையா டா, பொம்பளை பொறுக்கி” என்று தாறுமாறாக வசைபாடினார்.
தொடர்ந்து, அந்த பெண்ணுடன் வந்த நபர் அவரை கட்டுப்படுத்த முயன்றார். இருந்தும் இளம் பெண் மறுத்து கூச்சலிட்டார், அப்போது அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்றார். அப்பொழுது அவரது கன்னத்தில் அறைந்த அந்த பெண். அவரது சட்டையைப் பிடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸ்காரரிடம், “காசு இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வீர்களா” என்று வாக்குவாதம் நடத்தினார். இது அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
குடும்பத் தகராறு என்றால் காவல் நிலையம் சென்று புகார் அளிக்காமல் பொது இடத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.