கோவை: கோவையில் வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய நீரைக் குடித்த 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்க்கின்றனர்.
இதனிடையே ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலைக் கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி, விஜயா, மங்கலம் மற்றும் கண்ணம்மா ஆகிய 4 பெண்கள் இணைந்து 40க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் வழக்கம் போல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது தாகத்துடன் இருந்த ஆடுகள் அங்கு உள்ள வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய நீரைப் பருகின.
செத்து விழுந்த ஆடுகள்
அப்பொழுது ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழத் தொடங்கி அடுத்தடுத்து பலியாகின. இதனைப் பார்த்த பெண்கள் பரிதவித்துக் கண்கலங்கினர்.
விளைச்சலுக்காக, வாழைத் தோட்டத்தில் உரக்கரைசலை தண்ணீரில் கலந்து இருந்ததும், அதனை ஆடுகள் குடித்து பலியானதும் பின்னர் தெரிய வந்தது.
வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆடுகள் பலியாகி பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று பழங்குடி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.