கோவை: காவலன் உதவி ஆப் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த 2ம் தேதி கல்லூரி மாணவி 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு இருந்தே போலீசார் பெண்கள், மாணவிகளிடம் காவலன் உதவி ஆப் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதிகமானோர் அந்த ஆப்பை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களுக்கு மட்டுமில்லாமல் காவலன் உதவி ஆப் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள போலீசார் சமூக வலைதளத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் செல்போன் பேசிய படி நடந்து வருகிறார். போனில் அவரது தாயார் ஏன் நேரமாகிவிட்டது, பார்த்து வரும்படி கூறுகிறார். அந்த பெண்ணும் சரி என்கிறார். அதன் பின்னர் அந்த பெண்ணை ஒருவர் காரில் பின் தொடர்ந்து வருகிறார்.




அப்போது அங்கு இருந்த அந்த பெண்ணின் நண்பர், பெண்ணை நிறுத்தி விசாரிக்கிறார். அப்போது அந்த பெண் தன்னை யாரோ துரத்தி வருவது போல் இருந்தது என்கிறார். இதை தொடர்ந்து அந்த நண்பர் இதுபோன்ற சூழ்நிலைகள் வந்தால் பயப்பட வேண்டாம், உங்களது போனை 3 முறை அசைத்தால் போதும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் போயிவிடும் என்கிறார்.
தொடர்ந்து அவர் தமிழ் நாடு அரசு காவலன் உதவி ஆப் கொண்டு வந்துள்ளார்கள். முதலில் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து, உங்களது விவரங்களை அதில் பதிவு செய்து வைத்தால் போதும். ஜிபிஎஸ், டேட்டா ஆன் செய்யவில்லை என்றாலும், ஆப்பில் உள்ள அவசர பட்டினை அழுத்தினால் போதும் என முடிகிறது.
இந்த வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.


