கோவை: கோவையில் தன்னிடம் நகை பறிக்க முயன்ற நபருடன் போராடி அவரை போலீசில் பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி தீபா (48). இவர் வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை, தீபா ஆவாரம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசா நகருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் வந்தார். திடீரென்று அந்த வாலிபர் தீபாவின் கழுத்தில் கிடந்த தங்க தாலி செயினை பிடித்து இழுத்தார்.
உடனே சுதாகரித்துக் கொண்ட தீபா, செயினை பறிக்க விடாமல் இழுத்துப் பிடித்தார். மேலும், அந்த நபருடன் போராடினார். அதோடு “திருடன் திருடன்” என்று சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் திரண்டபோது, பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். அதன் பின்னர் அந்த வாலிபரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் தங்க செயினை பறிக்க முயன்றது கேரள மாநிலம் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த முகமது அமீன் (23) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


