கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் வரும் நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்று அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும், 50 வேளாண் விஞ்ஞானிகளுடன் தனி அரங்கில் கலந்துரையாடல் நடத்துகிறார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில் மண் மலட்டுத்தன்மை, நச்சுத்தன்மை, உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இயற்கை வேளாண் முறைகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்.
பிரதமர் மோடி பங்கேற்பதன் மூலம் இயற்கை வேளாண்மை குறித்து உலகளாவிய விழிப்புணர்வு ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வழி திறக்கும்,” என்றார்.
தமிழகத்தில் தற்போது வெறும் 10% மட்டுமே இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. கடைகளில் ஆர்கானிக் பொருட்களை இயற்கை விளைபொருட்களாக கூறி விற்பனை செய்கிறார்கள். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறைவு உள்ளது. இந்த மாநாடு மூலம் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்.
நச்சுத்தன்மை மற்றும் கெமிக்கல் பயன்பாட்டால் பல்வேறு நோய்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பி.அர்.பாண்டியன் கூறினார்.

