கோவை: கோவையில் உரிமை கோரப்படாத தொகைகளை மீட்க முகாம் நடத்தப்பட உள்ளது.
நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள் பங்கு தொகைகள், ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு கிடைக்க பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14.11.2025 அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் (கீழ்த்தளம்) மாலை 3.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த முகாம் இந்திய நிதி அமைச்சக வழிகாட்டுதலின் படி அனைத்து வங்கி, காப்பீடு மற்றும் இதர துறை சார்ந்த அலுவலக கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. மேற்படி இந்த முகாமின் நோக்கம் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் பங்குகள், மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்ட வாரிசுகளுக்கு தங்களது உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவுவதாகும்.
உங்கள் வங்கியில் தொடர்ந்து பத்து ஆண்டிற்கு மேல் செயல்படாத கணக்குகளில் மற்றும் பணம் கோரப்படாத வைப்புத்தொகை (பத்தாண்டிற்கு மேல்) உள்ள தொகை RBI யின் DEAF கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
உங்கள் வங்கியின் இணையதளம் அல்லது RBI UDGAM portal (https://udgam.rbi.org.in) தெரிந்துகொள்ளலாம். நீங்களோ அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளோ, எந்த நேரத்திலும் அதைக் கோரிப் பெறலாம். இந்த முகாமில் வங்கித்துறை, காப்பீட்டு துறை, நிதிதுறை, மற்றும் இதரதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.
பொதுமக்கள் தங்களது உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று தேவையான ஆலோசனைகளை பெற்று தங்களது உரிமை கோரப்படாத தொகைகளை மீட்க இம்முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

