கோவை: வெள்ளலூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக ஒரு புகைப்படம் கோவை முழுவதும் பரவி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கோவை சூலூரை அடுத்த ராவத்தூர் பிரிவு அருகே கடந்த மாதம் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கத் தொடங்கினர்.
ஆனால், சிறுத்தை அவர்கள் வைத்த கேமிராவில் அகப்படவில்லை. இதனிடையே, சூலூர் சுற்றுவட்டாரம் மற்றும் வெள்ளலூர் சுற்றுவட்டாரத்தில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டன.
தொடர்ந்து, அது காட்டுப்பூனை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுத்தை ஒன்று ஆட்டை அடித்துக் கொன்றுவிட்டது போலவும், சிறுத்தையின் கால் தடங்கள் பதிவானது போலவும் புகைப்படங்க வைரலாகின.
தொடர்ந்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று முதல் வெள்ளலூர் பகுதியில் சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நடமாடி வருவதாகக் கூறி ஒரு புகைப்படம் வைரைலாகி வருகிறது. கூடவே ஒரு பெண் ஒருவர் தான் சிறுத்தையைக் கண்டதாக கூறும் ஆடியோவும் பரவி வருகிறது.
இது வெள்ளலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இந்த புகைப்படம் குறித்து வனத்துறையினரிடம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “படத்தில் இருப்பது சிறுத்தை அல்ல சிவிங்கிப்புலி. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம். சிறுத்தை அல்லது சிவிங்கிப் புலி நடமாட்டத்திற்கான எந்த ஒரு தடயங்களும் இல்லை. இது உண்மையான படம் அல்ல. இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

தகவல் பரவி வருவதைப் போல் வெள்ளலூர் சுற்றுவட்டாரத்தில் சிறுத்தை நடமாட்டம் இல்லை. பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற படங்களை சிலர் பரப்பிவிடுகின்றனர். வனத்துறை தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.” என்றனர்.
பொதுமக்கள் தங்களுக்கு வரும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து முழுமையாக விசாரிக்காமல், அதனை அப்படியே பலருக்கும் பகிர்ந்து விடுவதால், சமூகத்தில் ஒரு பதற்றமான சூழல் உருவாகிறது.
எனவே இதுபோன்ற தகவல்களைப் பரப்புவதற்கு முன்பு, அதன் உண்மைத்தன்மையை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். வதந்தி பரப்பி மக்கள் அமைதியைக் கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையை நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் வலியுறுத்துகிறது.
இந்த செய்தியை வெள்ளலூர் மற்றும் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், உங்கள் நண்பர்கள்-உறவினர்களுக்கும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


