உக்கடத்தில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி! தர்ம அடி கொடுத்த மக்கள்!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் உழவன் கோடு அருகே உள்ள கொல்லங்கோடு பாரா விளகம் வெண்ணஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் ஆதித்யன் ( வயது 19).

இவர் கோவை தனியார் கல்லூரியில் பி. சி. ஏ .படித்து வருகிறார். இதற்காக கோவையில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர்வு விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு சென்றார். பிறகு மீண்டும் நேற்று கோவைக்கு திரும்பினார். 

அதன் பிறகு நேற்று அவரது கல்லூரி நண்பர் அனிருத் என்பவர் உடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக பேரூர் பைபாஸ் ரோட்டில் ஐ லவ் கோவை பார்க் எதிரே உள்ள ஏரி கார் பார்க்கிங் அருகில் நடந்து சென்றார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். ஆதித்யன் மற்றும் அனிருத்தை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம் 2 ஆயிரத்தை பறித்தனர். பிறகு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். 

அப்போது ஆதித்யன் , அனிருத் ஆகியோர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் பணம் பறித்துச் சென்ற வாலிபர்களை சுற்றி வளைத்தனர்.

பிறகு அவர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடைவீதியில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அதில் ஒருவர் கரும்புக்கடை சாரமேடு திப்பு நகரை சேர்ந்த சலாம் (வயது 22) என்றும் மற்றொரு நபர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் என்றும் தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recent News

Video

Join WhatsApp